காலிமுகத்திடலில் கலக்கிய காரைதீவு விபுலானந்தா நடனநர்த்தகிகள்!

( வி.ரி. சகாதேவராஜா)

முத்தமிழ் வித்தகர் பிறந்த காரைதீவை பிரதிநிதித்துவப்படுத்தும் விபுலானந்த நாட்டிய நிருத்தியாலய பரதநாட்டிய கலைஞர்கள் நேற்று காலிமுகத்திடலில் முதன் முறையாக பங்குப்பற்றி பாராட்டைப் பெற்றனர்.

கொழும்பு, காலி முகத்திடலில் (Galle Face Green) நேற்று உலகின் கவனத்தை ஈர்த்த மாபெரும் பரதநாட்டிய நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றமை தெரிந்ததே.

சுமார் 5,000 கலைஞர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்ற இந்த நிகழ்வு, புதிய உலக கின்னஸ் சாதனையாக அரங்கேறியுள்ளது.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பரதநாட்டிய அசைவுகளை ஒருங்கிணைந்து நிகழ்த்திய காட்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்த நிகழ்வில் காரைதீவு மாணவிகள் 45 பேர் நடன ஆசிரியை செல்வி தக்ஷாலினி ஜெயகோபன் தலைமையில் கலந்து கொண்டு சிறப்பான ஆற்றுகையை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வின் நடுவராக ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) வருகை தந்திருந்த கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் நடுவர், ரிஷி நாத் (Guinness World Records Adjudicator Mr. Rishi Nath) கலந்துகொண்டு, இந்த சாதனையை நேரில் ஆய்வு செய்து இதற்கான உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவித்தார்.

“நீங்கள் அனைவரும் இப்போது அதிகாரப்பூர்வமாக வியக்கத்தக்க சாதனையாளர்கள்” என்று பாராட்டிய அவர், புதிய உலக சாதனைக்கான சான்றிதழை நிகழ்வின் பிரதம அதிதியான பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிடம் மேடையில் வைத்து கையளித்தனர்.

சான்றிதழைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், இலங்கை மண்ணில் தமிழ் பாரம்பரியக் கலையின் பெருமையை உலக அரங்கிற்கு கொண்டு சேர்த்துள்ள இத்தருணம், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.