காலி முகத்திடலில் கின்னஸ் சாதனை நிறைவு!

கொழும்பு காலி முகத்திடலில் 5000 பரதநாட்டிய கலைஞர்கள் ஒன்றிணைந்து 10,000 கால் சலங்கைகளின் ஒரே தாள ஒலியுடன் நிகழ்த்திய “சங்கமம் 2026” பரதநாட்டிய கின்னஸ் உலக சாதனை நிகழ்வு இன்று (14.06.2026) வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்தியாவில் நடைபெற்ற அயலக தமிழர் மாநாட்டில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, அவரின் வழிகாட்டலின் கீழ் இந்தியாவின் ‘சங்கமம் குளோபல் அக்கடமி(Global Academy) மற்றும் இலங்கைக்கான லியா ஹோலி டேஸ்(Leah Holly Days)ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

5000 நாட்டியக் கலைஞர்கள் ஒரே மேடையில் அணிதிரண்டு ஆடிய இந்த நாட்டியாஞ்சலி, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

அதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழ் கின்னஸ் நிறுவனத்தினால் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிடம் மேடையில் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சான்றிதழைப் பெற்றுக்கொண்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், “இலங்கை மண்ணில் தமிழ் கலையின் பெருமையை உலகிற்கு உணர்த்திய இந்த தருணம் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் கிடைத்த பெருமையாகும்” எனத் தெரிவித்து கலைஞர்களைப் பாராட்டினார்.

தமிழ் கலாசார பெருமிதத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் அமைந்த இந்த வரலாற்று நிகழ்வைக் காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் காலி முகத்திடலில் திரண்டிருந்தனர்.

அத்துடன், இவ்வாறான பிரம்மாண்ட கலாசார நிகழ்வை இலங்கையில் நடத்துவதற்கு வழிவகுத்த பிரதி அமைச்சருக்கு மாணவர்களும் பெற்றோர்களும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, தொழில் விவகார பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட பல முக்கிய விசேட அதிதிகளும் கலந்துகொண்டனர்