( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு பொலிஸ் நிலைய சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார் என்று தெரிகிறது.
இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ் விதம் தற்கொலை செய்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த 65 வயது மதிக்கத்தக்க 6 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் காரைதீவு 1 பிரிவு மாதவி வீதியைச் சேர்ந்த சாமித்தம்பி பாக்கியராசா ஆவார்.இவர் முன்னாள் ஓய்வு பெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்.
அணிந்திருந்த சாரம் துண்டினை பயன்படுத்தி தூக்கிலிட்டு உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் மரணமடைந்த குடும்பஸ்தர் கடந்த 2 நாட்களுக்கு முன்னரும் குடும்ப பிரச்சினைக்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அதே பிரச்சினைக்காக மீண்டும் இரண்டாவது சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில வைத்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் உயிரிழந்தவரின் சடலம் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.


