தவிசாளருக்கு உரிய ஆசனம் வழங்கப்படாதமை தொடர்பில் சாணக்கியன் அதிருப்தி..

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (03.06.2026) பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் ஏற்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான க. பிரபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள், அபிவிருத்தித் திட்டங்கள், கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி, பொதுப் போக்குவரத்து, பேருந்து சேவைகள், காணி விவகாரங்கள், உப அஞ்சல் அலுவலகத் தேவைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

கூட்டத்தின் போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க. செந்தில்குமார் அவர்களுக்கு கூட்டத்தின் தலைமை மேசையில் (Head Table) ஆசனம் ஒதுக்கப்படாதமை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “இப்பிரதேசத்தின் முதற்பிரஜையாகக் கருதப்படும் தவிசாளருக்கு உரிய மரியாதையும் கௌரவமும் வழங்கப்பட வேண்டும். அதற்கான நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அரசின் சட்டங்களிலும் சுற்றறிக்கைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே எதிர்காலத்தில் தவிசாளருக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.

மேலும், ஆரையம்பதியில் அமைந்துள்ள சிறுகைத்தொழில் அமைச்சிற்குச் சொந்தமான காணியை மண்முனைப்பற்று பிரதேச சபைக்கு வழங்குவது தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டார். குறித்த காணி பிரதேச சபைக்கு வழங்கப்படுமாயின், கடைத்தொகுதிகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு கட்டடங்களை அமைப்பதன் மூலம் ஆரையம்பதியை நகரமயமாக்கும் முயற்சிகளுக்கு அது முக்கிய பங்களிப்பாக அமையும் என தெரிவித்தார். அதற்காக தேவையான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.அத்துடன், பிரதேசத்தில் நிலவும் பேருந்து சாரதிகள் பற்றாக்குறை தொடர்பாகவும் கவனம் செலுத்திய அவர், பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் மேலதிக சாரதிகள் நியமிக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக சுட்டிக்காட்டி, இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் க. பிரபு அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா, ஞா. சிறிநேசன், வைத்தியர் இ. சிறிநாத், மண்முனைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க. செந்தில்குமார், துறைசார் அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும் பிரதேச மக்களின் தேவைகள் தொடர்பான பரிந்துரைகளையும் முன்வைத்தனர்.