டித்வா புயலினால் சேதமடைந்த சவுக்குமர காடுகளை மீழுருவாக்கம் செய்வது தொடர்பான கலந்துரையாடல்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட டித்வா புயலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சவுக்குமர காடுகளை மீழுருவாக்கம் செய்வது தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (03) திகதி இடம்பெற்றது.

5000 இற்கு மேற்பட்ட சவுக்கு மரங்கள் இந்த புயலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலமீன்மடு பகுதியிலேயே அதிகளவிலான சவுக்கு மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கரையேரப் பேணல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

65 ஏக்கர் எக்டெயார் நிலப்பரப்பில் மீள் சவுக்கு மர நடுகை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள துடன், அதற்கான உத்தேச பெறுமதியாக 18 மில்லியன் செலவாக உள்ளதுடன் அதற்கான நிதி ஒதுக்கீடானது அரசின் டித்வா புயல் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இதன் போது கரையோர பேணல் திணைக்கள அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மண்முனை வடக்கு, மண்முனை பற்று மற்றும் மண்முனை தென் எருவில் பற்று ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரிகள், கரையேர பேணல் திணைக்களம், மரக் கூட்டுத்தாபனம், வனவள திணைக்களம் ஆகியவற்றின் உயரதிகாரிகள் மற்றம் மாவட்ட செயலக சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டதுடன், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சவுக்குமர காடுகளை எவ்வாறு மீழுருவாக்கம் செய்வது, அதை பராமரிப்பது மற்றும் பாதுகாப்பது தொடர்பாக தமக்குள் நிலவும் சந்தேகங்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் தெளிவினையும் பெற்றுக் கொண்டனர்.

அதே போன்று சுனாமி போன்ற அனர்த்தங்களின் தாக்கத்தினை குறைக்கும் பொருட்டு எதிர்வரும் காலங்களில் கரையோரப் பகுதிகளில் முதற்படையாக சவுக்கு மரத்தினையும் இரண்டாம் படையாக பனை மரங்களையும் நடுவதன் ஊடாக பல விதத்திலும் நன்மையடைய கூடலாமென இதன் போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.