பணமோசடி வழக்கு தொடர்பில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு!

மோசடிகளில் ஈடுபட்டுள்ளவர் என்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய 200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில், இலங்கையை சேர்ந்த பொலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உட்பட அனைத்துப் பிரதிவாதிகளுக்கும் எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் சர்மா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதாக ஜாக்குலின் கூறிவந்த போதிலும், சுகேஷின் குற்றப் பின்னணியை அறிந்திருந்தும் அவரிடமிருந்து அவர் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றுக்கொண்டுள்ளார் என்றும், குற்றப்பணத்தைப் பயன்படுத்துவதை மறைக்கச் சுகேசுடன் கூட்டுச் சேர்ந்து செயற்பட்டுள்ளார் என்றும் முதற்கட்ட ஆதாரங்கள் மூலம் நீதிமன்றம் அவதானித்துள்ளது.

சுகேஷின் குற்றப் பின்னணி குறித்துத் தெரிவிக்கப்பட்ட பின்னரும் அவரிடமிருந்து 5.71 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளை ஜாக்குலின் பெற்றுள்ளார்.

இதன்படி, ஜாக்குலினின் சகோதரியின் கணக்கிற்கு ஒரு இலட்சத்து 72 ஆயிரம் அமெரிக்க டொலர்களும், சகோதரரின் கணக்கிற்கு 26 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர்களும் மாற்றப்பட்டுள்ளன.

குற்றப்பணம் மூலம் தனது பெற்றோருக்குச் சிற்றூந்துகள் வாங்கப்பட்டதையும் ஜாக்குலின் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் 3ஆம் பிரிவின் கீழ் ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றமிழைத்துள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார்.