குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மென்பொருள் தொகுதி (Software System) ஒன்றினை நடைமுறைப்படுத்துவதற்காக 9.8 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை செலவிடப்பட்டதாக சந்தேகநபர் எழுத்துப்பூர்வமான பிரகடனம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
எனினும், அத்தகைய மென்பொருள் தொகுதி எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களை இழைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.


