தாயின் கருவில் உயிரிழந்த சிசு தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் தாயொருவரின் கருவிலேயே சிசு உயிரிழந்த சம்பவம் தொடர்பில், சுகாதார அமைச்சின் முதற்கட்ட விசாரணையில் பல விடயங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட குறித்த மருத்துவமனையின் மகப்பேற்று விசேட மருத்துவர் மற்றும் சிரேஷ்ட வதிவிட மருத்துவர் ஆகியோர் தமது கடமையைப் செய்ய தவறியுள்ளதாக, சுகாதார அமைச்சின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அண்மையில் சுகாதார அமைச்சினால் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த இரண்டு மருத்துவர்களும் தற்காலிகமாக சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடந்த ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தின் போதே இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாகக் பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி, எமது செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.

அத்துடன், பிரசவத்தின் போது மெக்கோனியம் எனப்படும் சிசுவின் முதல் மலக்கழிவு சம்பந்தமாக ஏற்பட்ட சிக்கல் குறித்து, விடுதிப் பொறுப்பு மருத்துவர் ஆறு சந்தர்ப்பங்களில் பிரசவ மற்றும் மகப்பேற்று விசேட மருத்துவருக்கும் சிரேஷ்ட வதிவிட மருத்துவருக்கும் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.