தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு காங்கிரஸ் அரசியல் விவகாரங்கள் குழுக் கூட்டம் நேற்று நள்ளிரவில் காணொளி மூலமாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் விஜய் தலைமையில் ஆட்சி அமைவதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
எனினும், இந்த ஆதரவிற்கு காங்கிரஸ் கட்சி ஒரு முக்கிய நிபந்தனையை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அல்லது அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவை எக்காரணம் கொண்டும் தவெக பெறக்கூடாது என்பதே அந்த நிபந்தனையாகும்.
மேலும், மதச்சார்பற்ற கொள்கையுடைய கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே ஆட்சி அமைக்க வேண்டும் என்றும், வகுப்புவாத சக்திகளைத் தவிர்த்து அரசியல் ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த திடீர் அரசியல் நகர்வு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரபூர்வமான பதில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


