மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டிகள் இன்று (05.05.2026) செவ்வாய்க்கிழமை நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்றன.
வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வானது, தமிழ் பாட இணைப்பாளர் பு.சதீஷ்குமார் அவர்களின் நேர்த்தியான நெறிப்படுத்தலிலும் ஒழுங்குபடுத்தலிலும் முன்னெடுக்கப்பட்டது.
இப்போட்டிகளில் மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு மற்றும் ஏறாவூர்பற்று ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு தமது மொழித் திறமைகளை வெளிப்படுத்தினர்.
நிகழ்வின் ஆரம்ப விழாவில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான திருமதி க.சுபாகரன், திருமதி தே.உதயகரன் ஆகியோருடன், கோட்டக்கல்விப் பணிப்பாளர்களான எஸ்.சக்திதாஸ், சி.தீபதர்சன் மற்றும் மூ.உதயகுமாரன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மாணவர்களின் ஆளுமை மற்றும் மொழி ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில் அமைந்த இப்போட்டிகளின் நிறைவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







