வானிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு!

தற்போது நிலவும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை, தென்மேற்கு பருவமழை தொடங்குவதையொட்டி இந்த மாதத்தின் நடுப்பகுதியில் முடிவுக்கு வரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, மே 15ஆம் திகதிக்குள் குளிர்ச்சியான வானிலை எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “இலங்கையர்கள் அனுபவித்த வெப்பமான வானிலை மே 15ஆம் திகதி அளவில் முடிவுக்கு வரும். அதே காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இலங்கையில் சமீபத்தில் நிலவிய தீவிர வெப்பத்திற்குப் பின்வரும் காரணிகள் பங்களித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வளிமண்டலத்தில் நிலவும் அதிகப்படியான ஈரப்பதம், இரவிலும் வியர்வையை ஏற்படுத்துகிறது.

மேலும், இந்த ஈரப்பதமானது மனித உடலில் இருந்து வெளியேறும் வியர்வையை வளிமண்டலம் உறிஞ்சுவதைத் தடுக்கிறது.

காற்றின் வேகம் குறைந்திருப்பது, மேகங்கள் உருவாகுவதைத் தடுத்துள்ளது.

இதுவே கடந்த சில வாரங்களாக இலங்கையில் வறண்ட வானிலை நிலவக் காரணமாக அமைந்தது.

தற்போது பெய்து வரும் மாலை நேர மழை, மே 8ஆம் திகதி முதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், சபரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கு அதிகமான பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.