பிரித்தானிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

பிரித்தானியாவில் தஞ்சம் கோருபவர்களைத் தங்க வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த மேலும் 11 விடுதிகள் (Hotels) மூடப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் தஞ்சம் கோருபவர்களைத் தங்க வைப்பதற்காக உச்சக்கட்டத்தில் சுமார் 400 விடுதிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

தற்போது அந்த எண்ணிக்கை 185 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

புதிதாக 11 விடுதிகள் மூடப்படுவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 65 மில்லியன் பவுண்டுகள் சேமிக்கப்படும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த உள்துறை அமைச்சர் அலெக்ஸ் நோரிஸ் , பிரித்தானியாவில் தங்குவதற்கு உரிமை இல்லாதவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அத்துடன், தஞ்சம் கோருபவர்களை விடுதிகளுக்குப் பதிலாக இராணுவ முகாம்கள் போன்ற மாற்று இடங்களில் தங்க வைப்பதன் மூலம் விடுதிகளின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தஞ்சம் கோருபவர்கள் விடுதிகளில் தங்குவது உள்ளூர் மக்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், “பிரித்தானியாவுக்கு வந்தால் விடுதிகளில் தங்கலாம்” என மனிதக் கடத்தல்காரர்கள் கூறி மக்களைச் சட்டவிரோதமாக அழைத்து வருவதற்கும் இது ஒரு காரணமாக அமைந்தது.

தற்போது விடுதிகள் மூடப்படுவது அத்தகைய சட்டவிரோத வருகைகளைக் குறைக்க உதவும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சிறு படகுகள் மூலம் சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 1,00,625 ஆக அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.