பல வருடங்களாக தீர்க்கப்படாத பாதை பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை

ந.குகதர்சன்

கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 14 ஆம் வட்டாரத்தின் தேவபுரம் கிராம சேவகர் பிரிவிலே பல வருடங்களாக தீர்க்கப்படாத பாதை பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாதை வழங்கப்பட்டதாக கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

1987ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்திலே பாகம் மூன்றிலே பொது வழிகள் பற்றிய தத்துவங்களும் கடமைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கமைய உள்ளூராட்சி மன்றங்கள் இச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய பொறுப்புள்ளது.

அதனடிப்படையில் எமது பிரதேச சபைக்குட்பட்ட கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 14 ஆம் வட்டாரத்தின் தேவபுரம் கிராம சேவகர் பிரிவிலே பல வருடங்களாக தீர்க்கப்படாத பாதை முறைப்பாடு ஒன்று சபையினை பொறுப்பேற்ற காலப்பகுதியில் கிடைத்திருந்தது.

மறித்து அடைத்து வைக்கப்பட்டிருக்கின்ற பொது வழியை பெற்றுக் கொடுப்பதற்காக எமது சபையினுடைய தொழில்நுட்ப உத்தியோகத்தர், வருமானவரி உத்தியோகத்தர், ஊழியர்கள் உட்பட பலரும் இணைந்து களவிஜயங்களை மேற்கொண்டு அதன் உண்மைத் தன்மையினை கண்டறிந்து செயற்படத் தொடங்கினர். இவர்கள் இதனை முறையாக மேற்‌கொள்வதற்குரிய அதிகாரம் என்னால் குறித்த அலுவலர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இப்பாதை தொடர்பான முறைப்பாடு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர் போன்ற அலுவலகங்கள் வரை சென்றிருந்தது. இப் பாதை தொடர்பான பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் இல்லையேல் இது தொடர்பான‌ அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டதற்கு அமைய நடவடிக்கையில் ஈடுபட்டேன்.

குறித்த குடும்பங்களுக்கான பாதை மறிக்கப்பட்டு சுற்று மதில்கள் மலசலகூடங்கள் அனுமதியற்ற கட்டடங்கள் கட்டப்பட்ட‌ நிலையில் காணப்பட்டிருந்தது. இந்நிலையில் பொதுவழி பாதை தேவையான குடும்பங்கள் ஒரு‌ தனியார் காணி ஒன்றினுள் தங்களது போக்குவரத்தினை மேற்கொண்டிருந்தார்கள்.

குறித்த பொதுவழிப் பாதையினை பெற்றுக் கொடுக்க வேண்டிய கடப்பாடு பிரதேச சபைக்குரியது. என்பதன் அடிப்படையில் கிராம உத்தியோகத்தர் சந்திவெளி பொலிசார், சபையினுடைய தொழில்நுட்ப உத்தியோகத்தர், வருமான வரி உத்தியோகத்தர், சபையினுடைய ஊழியர்களோடு நடவடிக்கைக்காக சென்றிருந்தேன்.

மக்களது அன்றாட வாழ்க்கையோடு மிகுந்த தொடர்புபட்டது. பொது வழிகள் இதன் மூலமே தங்களது போக்குவரத்தினை அவர்கள் மேற்கொள்கின்றனர். ஒரு வீட்டிலே மரணம் ஒன்று நிகழ்ந்தால் அதனை தூக்கிச் செல்வதற்குரிய அகன்ற பொது வழி பாதையொன்று அவசியமான ஒன்று என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டும்.

பலகாலமாக தீர்க்கப்படாது அலைக்கழிக்கப்பட்ட அக் குடும்பங்களுக்கான பொது வழியினை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டேன். அனுமதியற்ற கட்டடங்கள் இடிக்கப்பட்டது. அகன்ற பாதை ஒன்று திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மக்கள் பயன்பாட்டிற்கான பாதைகள் திறக்கப்படும் போது கடமையை சரி வரச் செய்தோம்‌. என்கின்ற ஒரு மன நிறைவு எப்போதும் எமக்கு மகிழ்ச்சியையே ஏற்படுத்தும். என்னோடு இணைந்து செயற்பட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் என கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.