“தாந்தாமலை முருகன் ஆலய அபிவிருத்திக்கு தொல்லியல் திணைக்களம் தடை!

மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்தின் அபிவிருத்திப் பணிகள்,
தொல்லியல் திணைக்களத்தின் சட்ட வரையறைகள் காரணமாக தடையடைந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயம் பல ஆண்டுகாலப் பழமையான வரலாற்றுப்
பின்னணியைக் கொண்டது. இவ்வாலயம் நீண்டகாலமாக புனருத்தாரணம் செய்யப்பட
முடியாத நிலை காணப்படுவதாக ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்ததையடுத்து,
இன்று (01.04.2026) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
சாணக்கியன் இராசமாணிக்கம் தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு நேரில் சென்று
பார்வையிட்டார்.

இவ்வாலயம் தொல்லியல் திணைக்களத்தினரால் தொல்லியல் இடமாக வர்த்தமானி
அறிவிப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக,
ஆலயத்தில் எந்தவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாத
நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆலயத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமாயின், முதலில்
தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியைப் பெற வேண்டிய கட்டாயம்
இருப்பதாகவும், அதன் பின்னரே பணிகளை முன்னெடுக்க முடியும் என்றும்
கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் தொல்லியல் திணைக்கள
அதிகாரிகளுடனும், சம்பந்தப்பட்ட அமைச்சருடனும் நாடாளுமன்றத்தில்
கலந்துரையாடி, தேவையான அனுமதியைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நாங்கள் தொல்லியல் பகுதிகளைப் பாதுகாப்பதற்கு எந்தத் தயக்கமும் இல்லை.
ஆனால், பாதுகாப்பு என்ற பெயரில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை
கைப்பற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

இதேபோன்று கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
நெல்லிக்கல் மலைப்பகுதியும் தொல்லியல் இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அங்கு எந்தவிதமான கட்டடங்களும் இல்லை.

இவ்வாறு இல்லாத இடங்களில் புதிய கட்டடங்கள் அமைக்கப்படும் வேளையில், எமது
தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களிலும், அங்கு அமைந்துள்ள
ஆலயங்களிலும், கலாசாரச் சின்னங்களிலும் தொல்லியல் திணைக்களம் பல்வேறு
தடைகளை விதித்து வருகிறது.

எதிர்காலத்தில் தொல்லியல் திணைக்களத்திடம் சட்டரீதியாக விண்ணப்பித்து,
அதற்கான அனுமதியைப் பெற்று, இவ்வாலயத்தை அபிவிருத்தி செய்வோம்” என்றார்.