( வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்கள் கடத்தப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டு கிணறுகளில் வீசப்பட்ட விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மயக்கமருந்துகளை வழங்கியதாக தெரிவிக்கப்படும் ஏழாவது சந்தேக நபரான வத்தளை பார்மசி உரிமையாளரை, பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் விசாரணை செய்வதற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பிலிருந்து சென்ற கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கொழும்பு,வத்தளை பகுதியில் வைத்து மயக்கமருந்துகளை விநியோகம்செய்த நபரை கைதுசெய்திருந்தமை தெரிந்ததே.
விசாரணையின் பின்னர் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் நேற்று மாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.தர்சினியின் அறையில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது ஏழாவது சந்தேக நபருடன் முதலாவது சந்தேக நபரும் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேக நபர்கள் மூடிய நிலையில் நீதிமன்றுக்குள் அழைத்துச்செல்லப்பட்டனர்.
இதன்போது கொக்கட்டிச்சோலை பொலிஸார் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக ஏழாவது சந்தேக நபரை எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதியளித்தார்.



