பண்டிகை கால இணைய மோசடிகள் தொடர்பில் எச்சரிகை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சமூக வலைதளங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஊடாக முன்னெடுக்கப்படும் பண மோசடிகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் முன்னணி தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவிக்கையில்,

வங்கிகள் அல்லது விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் போல் நடித்து, தனிப்பட்ட தகவல்கள், கடவுச்சொற்கள் (Passwords) மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்களை (OTP) பெற்றுக்கொள்ள முயற்சித்தல்.

சமூக வலைதளங்கள் ஊடாக நம்பமுடியாத அளவிலான தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி, செலவு அட்டை (Credit card) விபரங்களைத் திருடுதல்.

உத்தியோகபூர்வ நிறுவனங்களின் சின்னங்கள் மற்றும் வடிவமைப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட போலி இணையத்தளங்கள் ஊடாக மக்களை ஏமாற்றுதல்.

தற்போது மாதத்திற்கு 150 முதல் 200 வரையிலான முறைப்பாடுகள் பதிவாவதாகக் குறிப்பிட்ட அவர், பண்டிகைக் காலத்தில் இவை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவித்தார்.

குறிப்பாக இணையத்தள மோசடிகள்,காதல் மற்றும் நட்புறவு ரீதியான மோசடிகள் ,பொதி விநியோக மோசடிகள் ,போலி முதலீட்டுத் திட்டங்கள் போன்றவகையில் இடம்பெறுகின்றன.

இதேவேளை சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது செய்திகள் கிடைத்தால் பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வங்கி அல்லது விமான நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி எண்கள் ஊடாகத் தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்தவும்.

எக்காரணம் கொண்டும் உங்களின் இரகசியக் குறியீடுகளை (OTP/Password) அந்நியர்களுக்கு வழங்க வேண்டாம்.

ஏதேனும் சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் நிகழ்ந்தால், அது குறித்து உடனடியாக காவல்துறைக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு இத்தகைய சம்பவங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கினாலும், இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை காவல்துறையினரே முன்னெடுப்பார்கள் என்றும் சாருக தமுனுபொல மேலும் தெரிவித்தார்.