அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

இலங்கையில் அமலில் உள்ள அவசரகால நிலையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அவர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த அதிவிசேட வர்த்தமானி, பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் பொது அமைதியை நிலைநிறுத்துதல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்காகவே இந்த நீட்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாட்டைத் தாக்கிய டித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட சேதங்களிலிருந்து நாடு இன்னும் முழுமையாக மீளாத நிலையில், நிவாரணப் பணிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க இந்த நடவடிக்கை அவசியமானதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனுடன் இணைந்த மற்றொரு வர்த்தமானி அறிவித்தலின் மூலம், மின்சாரம், எரிபொருள் விநியோகம், சுகாதாரம் மற்றும் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகத் தொடர்ந்தும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, அவசரகால அதிகாரங்கள் பொதுமக்களின் சிவில் உரிமைகளை பாதிக்கும் வகையில் பயன்படுத்தப்படமாட்டாது என ஜனாதிபதி முன்பே உறுதியளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.