நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட நிந்தவூரைச் சேர்ந்த மூத்த இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர், கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம் அவர்கள் இன்று (25.03.2026) இறையழைப்பை ஏற்றுக் கொண்டார்.
ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி ஜெஸ்மின் சலீம் அவர்களின் அன்புக்கணவரும், எஸ்.எப். அகீலா மற்றும் எஸ்.எம். அகீல் ஆகியோரின் பாசமிகு தந்தையுமான இவர், 1966ஆம் ஆண்டிலிருந்து பிராந்திய செய்தியாளராகவும், ஊடகத் துறையில் அரை நூற்றாண்டிற்கு மேல் அர்ப்பணிப்புடன் செயல்பட்டவராகவும் இருந்தார்.
தினபதி, சிந்தாமணி உட்பட முக்கிய பத்திரிகைகளில் பணியாற்றிய இவர், தனது எழுத்தின் மூலம் சமூகத்தின் உண்மைக் குரலாகவும், அம்பாறை மாவட்டத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் சமூக ஒத்துழைப்பு செய்தியாகவும் பெரிதும் மதிக்கப்பட்டார். “அனார்கலி” மற்றும் “அவதானி” என்ற புனைப் பெயர்களில் எழுதிய அவரது கட்டுரைகள் வார்த்தைகளை சமாதானத்தின் பாலமாக மாற்றியவை.
அவரது சிறப்பான பங்களிப்புக்காக 2008ஆம் ஆண்டு கலாபூஷணம் பட்டமும், 2010ஆம் ஆண்டு கிழக்கு மாகாண முதலமைச்சரின் வித்தகர் விருதும் வழங்கப்பட்டன. மேலும், திகாமடுல்ல பௌத்த சிங்கள சங்கத்தினால் சாஹித்யசூரி விருதும், 2017ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியல் விருதுகளிலும் கௌரவிக்கப்பட்டார்.
நிந்தவூர் கலை, இலக்கிய பேரவையின் ஆரம்பகர்த்தாகவும் மூத்த துணைத்தலைவராகவும் இருந்த இவர், அம்பாறை மாவட்ட ஊடக சம்மேளனத்தின் மூத்த ஆலோசகராகவும், பல நூற்றுக்கணக்கான கலை, இலக்கிய ஆர்வலர்களையும் ஊடகவியலாளர்களையும் உருவாக்கிய ஒளிவிளக்காகவும் இருந்தார்.
அவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளனர்.


