நூருல் ஹுதா உமர்
இலங்கையின் முதல் பிரதமரும் பெருந்தலைவருமான டி. எஸ். சேனாநாயக்க அவர்களின் 74 வது நினைவு தினம் அம்பாறை மாவட்டத்தில் மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
அம்பாறை மக்களின் நீர்த் தேவையை நிறைவேற்றிய காலத்தால் அழியாத தலைவராகப் போற்றப்படும் அவரது நினைவாக, இகினியாகலையில் அமைந்துள்ள கல்ஓய நீர்த்தேக்க திட்டம் அருகிலுள்ள அவரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து ஆன்மீக நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வுகள் அம்பாறை யூனிட்டி பிரண்ட்ஸ், அபி அபி பெனுவெங் சூ மிதுரோ, கல்லோய சுகந்த மித்துரு ஹவுல மற்றும் டி.எஸ். சேனாநாயக்க பழைய மாணவர் அமைப்புகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வின் தொடக்கமாக அம்பாறை டி.எஸ். சேனாநாயக்க தேசிய பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து அம்பாறை நகர கடிகார கோபுரம் அருகிலுள்ள உருவச்சிலைக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் இகினியாகலையில் அமைந்துள்ள கல்ஓய நீர்த்தேக்கத் திட்டம் அருகிலுள்ள உருவச்சிலையிலும் கௌரவ நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் போந்திவள சந்தானந்த ஹிமி தலைமையில் பௌத்த மற்றும் இந்து மத ஆன்மீக தலைவர்கள் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களை வழங்கினர். மேலும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல, பிரதேச செயலாளர், இங்கினியாகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அத்துடன் சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் வெள்ளையன் வினோகாந்த், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மஞ்சுல பெனாண்டோ உள்ளிட்ட அரசியல் மற்றும் சமூக தலைவர்களும், பொறியியலாளர்கள், வைத்தியர்கள், வியாபாரிகள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது உரையாற்றிய அதிதிகள், பெருந்தலைவர் டி.எஸ். சேனாநாயக்க அவர்களின் சேவைகள் மற்றும் குறிப்பாக கல்ஓய நீர்த்தேக்க திட்டம் மூலம் அம்பாறை மாவட்ட மக்களுக்கு கிடைத்த குடிநீர் மற்றும் பாசன வசதிகளை நினைவுகூர்ந்தனர். இன்று தமிழ், சிங்களம், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இன மக்களும் பயனடைந்து வருவது அவரது தொலைநோக்கு சிந்தனையின் விளைவாகும் எனக் குறிப்பிடப்பட்டது.
மறைந்தும் மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கும் பெருந்தலைவர் டி.எஸ். சேனாநாயக்க அவர்கள், இலங்கையின் வரலாற்றில் அழியாத இடம்பிடித்த சரித்திரச் சின்னமாகவே தொடர்ந்து போற்றப்படுகிறார்.


