நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை!

நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நாளை (22) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (21) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களுடன் அனுராதபுரம், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பச் சுட்டெண் (Heat Index) ‘அவதானம் செலுத்த வேண்டிய’ (Caution Level) மட்டம் வரை அதிகரிக்கக்கூடும் என அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவானது நாளை (22) அதிகரித்துக் காணப்படும் என்பதால், பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெப்பமான சூழலில் நீண்ட நேரம் தங்கியிருப்பது உடல் ரீதியான சோர்வை (Fatigue) ஏற்படுத்தும் என்பதோடு இத்தகைய காலநிலையில் தொடர்ந்து கடினமான பணிகளில் ஈடுபடுவது தசைப்பிடிப்பு (Heat Cramps) போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடும் வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், நிழலான இடங்களில் தங்கியிருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் குறித்துக் கூடுதல் அவதானம் செலுத்துவதுடன், அவசியமற்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.