எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்பயிர்ச்செய்கை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் ஆரம்பக் கூட்டம் (17) பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
வாகரை பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபன் அவர்களின் சிறப்பான ஒழுங்கமைப்பில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே .எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது. இதில் நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெரும்போக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டு பயிர்ச்செய்கை தொடர்பான முக்கிய ஆலோசனைகளை முன்வைத்தனர்.
இவ்வாண்டு சிறுபோகத் திட்டத்தின் கீழ் மத்திய, மாகாண மற்றும் சிறிய நீர்ப்பாசன அமைப்புகளின் ஊடாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்கப்படவுள்ளது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது .
விதைப்பு நடவடிக்கைகள் மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான நீர் விநியோகம் மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஜூலை வரை தொடரும். அறுவடைப் பணிகள் ஜூலை இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் நடுப்பகுதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
விவசாயிகளின் நலன் கருதி உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களுக்கான கூலி விகிதங்கள் முறையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்பட்டால் வெட்டுக்கூலியானது அறுவடைக்கு முந்திய வாரத்தில் விசேட கூட்டமொன்றின் மூலம் தீர்மானிக்கப்படும்
பயிர்ச்செய்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மார்ச் மாத ஆரம்பத்திலிருந்தே பயிர்ச்செய்கை நிலங்களில் இருந்து கால்நடைகள் அகற்றப்பட வேண்டும்.
இக்கட்டுப்பாட்டை மீறி கால்நடைகளை நிலங்களில் விடுவோருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புகளை ஈடுசெய்யும் வகையில், அனைத்து விவசாயிகளும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தமது பயிர்ச் செய்கைக்கான காப்புறுதி நடவடிக்கைகளை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, முறையான கால அட்டவணையைப் பின்பற்றி வெற்றிகரமான சிறுபோக விளைச்சலைப் பெற்றுக்கொள்ள ஒத்துழைக்குமாறு விவசாய அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .


