தியாக தீபம் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினவேந்தல் மாதத்தின் முதலாம் நாள் இன்றைய தினம் மட்டக்களப்பு கல்லடி நாவலடியில் அமைந்துள்ள அன்னையின் நினைவிடத்தில் தாயக செயலணியின் ஏற்பாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தாயக செயலணியின் மட்டக்களப்பு இணைப்பாளர் இருதயம் செல்வகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது அன்னை பூபதியின் நினைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரால் ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், அன்னையின் நினைவிடத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி, மௌன அஞ்சலிகள் செலுத்தப்பட்டன.
1988 காலப்பகுதிகளின் இடம்பெற்ற இந்திய இராணுவ பிரசன்னத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்திய இராணுவம் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும், அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அன்றைய அன்னையர் முன்னணியின் ஏற்பாட்டில் அன்னை பூபதி 1988.03.19 ம் திகதி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து அதே ஆண்டு ஏப்ரல் 19ம் திகதி தனது இன்னுயிரைத் தியாகம் செய்தார்.
அன்னையின் அத்தகு தியாகத்தை நினைவு கூரும் முகமாக வருடாந்தம் அன்னை உண்ணாவிரதம் இருந்த அந்த ஒரு மாத காலப்பகுதியை அன்னையின் நினைவேந்தல் மாதமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


