எம்.எஸ்.எம்.ஸாகிர்)
நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலையில் அர்ப்பணிப்புடன் ஆசிரியர் மற்றும் அதிபராகப் பணியாற்றிய ஏ. முஹம்மட் ஹில்மி சேர், தனது 38 வருட அரச சேவையின் பின்னர் நேற்று 11ஆம் திகதி புதன்கிழமையுடன் தமது அரச சேவையைப் பூர்த்தி செய்து ஓய்வு பெறுகின்றார்.
நிந்தவூரின் புகழ்பூத்த, பிரபல்யமான, ஒழுக்க விழுமியங்களை தன்னகத்தே கொண்ட பாவா மாஸ்டர் குடும்பத்தில் ஓய்வு பெற்ற அதிபர் ஆதம்பாவா மற்றும் உம்மு சக்கினா ஆகியோருக்கு 6ஆவது பிள்ளையாக, 2 சகோதரர்களுடனும் 3 சகோதரிகளுடனும் பிறந்த இவர், தமது ஆரம்பகல்வி தொடக்கம் உயர்தர விஞ்ஞான கல்வி வரை அல்-அஷ்றக் தேசிய பாடசாலையிலேயே கற்று, பல்கலைக்கழகத்தில் விவசாய விஞ்ஞான பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
பாடசாலைக் காலத்தில் கல்வி, விளையாட்டு என்பவற்றில் சிறந்து விளங்கிய இவர், பாடசாலையிலுள்ள பல கழகங்களிலும் இணைந்து செயற்பட்டதோடு, இறுதி இரண்டு வருடங்கள் இப் பாடசாலையில் சிரேஷ்ட மாணவர் தலைவராகவும் (Senior Prefect) கடமையாற்றியுள்ளார்.
இவர் 1988ஆம் ஆண்டு ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி, தெரிவாகி, ஆசிரியராக முதல் நியமனம் பெற்று நிந்தவூர் அல்-அஷ்றக் பாடசாலையிலேயே தமது கல்விப் பணியை ஆரம்பித்து ஆசிரியராகப் பணியாற்றியதோடு, அதிபர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி தெரிவாகி, 2012இல் அதிபர் சேவையில் இணைந்து கொண்டார்.
அதிபர் சேவை தரம் 1 ஐச் சேர்ந்த கல்விமாணி பட்டதாரியான இவர், தமது 38 வருட சேவைக்லத்தில் இப் பாடசாலையில் ஆசிரியராக 24 வருடங்களும் உதவி அதிபராக, பிரதி அதிபராக 07 வருடங்களுமாக மொத்தம் 31 வருடங்களும்
நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராக, அதிபராக மொத்தம் 07 வருடங்களுமாக சேவையாற்றி, ஆசிரியர் சேவையில் 24 வருடங்களையும் அதிபர் சேவையில் 14 வருடங்களையும் பூர்த்தி செய்து மொத்தம்
38 வருடங்கள் கல்விப் புலத்தில் சேவையாற்றியுள்ளார்.
இப் பாடசாலையில் விஞ்ஞான பாட ஆசிரியராக இருந்து நிந்தவூரின் அநேக மாணவர்களின் விஞ்ஞான கல்விக்கு வித்திட்ட இவர், தொடர்ந்து உதவி அதிபராக, நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதி அதிபராகக் கடமையாற்றி, பாடவிதானத்திலும் இணைப்பாடவிதானத்திலும் மாணவர்கள் சாதனை படைக்க தனது முழுப் பங்களிப்பையும் வழங்கியதோடு, நிர்வாகத்துக்குப் பொறுப்பான பிரதி அதிபராக இருந்த காலத்தில் பாடசாலையின் நிர்வாக கட்டமைப்பை ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பாக மாற்றி அதை சிறப்பாக செயற்படுத்திய ஒருவராவார்.
அதிபருக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராக இருந்து அவருடன் நெருக்கமான உறவைப் பேணி, ஆசிரியர்கள் ஏனைய ஆளணியினர்களின் மனங்களை அன்பால் வென்று பாடசாலையின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இவர், ஓய்வுபெற்றுச் செல்வது பாடசாலைக்கு ஈடு செய்யப்பட முடியாதொரு பாரிய இழப்பாகும்.
ஹில்மி சேர் ஓய்வு பெறும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அவருக்கான சேவை நலன் பாராட்டு விழா கல்லூரி அதிபர் ஏ. அப்துல் கபூர் தலைமையில் காஷிமி கேட்போர் கூடத்தில் ASWA நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமது குடும்ப சகிதம் கலந்து கொண்ட ஏ.எம்.ஹில்மி சேர், பாடசாலை பேண்ட் வாத்திய குழுவினரால் பாடசாலை முன்றலிலிருந்து காஷிமி கேட்போர் கூடத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, வாழ்த்துரைகள் வழங்கப்பட்டு, வாழ்த்துப்பா வாசிக்கப்பட்டு, பொன்னாடைகள் போர்த்தப்பட்டு, பரிசில்கள் வழங்கப்பட்டதோடு, நினைவுச் சின்னமும் பொற்கிழியும் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவரது ஓய்வு நிலையை கௌரவிக்கும் வண்ணம் ASWA நலன்புரி அமைப்பு ஒழுங்கு செய்த நிகழ்வு தவிர, பாடசாலையில் நிர்வாகப் பிரிவு, பெண்கள் பிரிவு, உயர்தர விஞ்ஞான பிரிவு, உயர்தர கலை, வர்த்தக பிரிவு, உயர்தர தொழிநுட்பப் பிரிவு, சாதாரண தரப் பிரிவு, முகாமைத்துவ குழு என பல்வேறு தரத்தினராலும் இவருக்கான பலதரப்பட்ட பிரியாவிடை வைபவங்கள் பாடசாலையில் நடைபெற்றன.
மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட நிர்வாக திறன் மிக்க ஹில்மி சேர், ஆசிரியராக, அதிபராக தமது பணியை திருப்திகரமாக நிறைவேற்றிய ஒருவராவார் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
இன்றுடன் ஓய்வு பெறும் ஹில்மி சேரை வாழ்த்தி பாராட்டி வழியனுப்புவதில் அஷ்றக் சமூகம் பெரு மகிழ்வடைகிறது.
வல்ல இறைவன் இத்தூய பணிகளைப் பொருந்திக் கொண்டு, அன்னாரின் ஓய்வு காலம் சிறப்பானதாகவும், அமைதியானதாகவும், இறைவனின் பொருத்தம் பெற்றதாகவும் அமைந்து சிறந்த தேகாரோக்கியத்துடன் வாழ அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம்.


