ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி கமேனி, நாட்டின் புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஈரானின் ‘நிபுணர்கள் அவை’ (Assembly of Experts) இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானிய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், உறுப்பினர்களின் பெரும்பான்மையான வாக்குகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, ஈரானில் அதிகாரம் ஒரே குடும்பத்திற்குள் கைமாறுகின்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடும் அழுத்தத்தின் பெயரிலேயே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
புதிய தலைவருக்கு விசுவாசமாக இருக்குமாறும், நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்குமாறும் ஈரானிய மக்கள், புத்திஜீவிகள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினருக்கு நிபுணர்கள் அவை அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஈரான் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், இந்த அதிகார மாற்றம் நிகழ்ந்துள்ளது.
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமேனி, நீண்டகாலமாகத் திரைக்குப் பின்னால் இருந்து அதிகாரத்தைச் செலுத்திய ஒரு முக்கிய நபராகக் கருதப்படுகிறார்.
1969 செப்டம்பர் 8 அன்று ஈரானின் மஷ்ஹாத் நகரில் பிறந்த இவர், அலி கமேனியின் ஆறு பிள்ளைகளில் இரண்டாமவர் ஆவார்.
தெஹ்ரானில் உள்ள ‘அலவி’ எனும் மதப் பள்ளியில் தனது இடைநிலைக் கல்வியை நிறைவு செய்த மொஜ்தபா, தனது 17 ஆவது வயதில் ஈரான்-ஈராக் போரின் போது குறுகிய காலம் இராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் போர் அனுபவமே அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் மீதான ஈரானிய ஆட்சியின் தீவிரப் போக்கிற்கு அடிப்படையாக அமைந்ததாகக் கருதப்படுகிறது.
1999 ஆம் ஆண்டு ஷியா இறையியலின் மையமான ‘கோம்’ நகருக்குச் சென்று தனது மதப் படிப்பைத் தொடர்ந்த மொஜ்தபா, அதுவரை மதகுருமார்களுக்கான பாரம்பரிய ஆடைகளை அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனது தந்தையைப் போலன்றி பெரும்பாலும் பொது வெளிச்சத்திற்கு வருவதைத் தவிர்த்து வந்துள்ள இவர், இதுவரை எவ்வித அரசுப் பதவியையும் வகிக்கவில்லை.
பொதுக்கூட்டங்களில் உரையாற்றியதோ அல்லது ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்ததோ இல்லாத நிலையில், இவரது நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் மிகக் குறைந்த அளவிலேயே வெளியாகியுள்ளன.
இருப்பினும், 2000-களின் பிற்பகுதியில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் இவரை “அதிகாரத்தின் பின்னணியில் இருக்கும் சக்தி” என வர்ணித்திருந்தன.
அத்துடன், ஈரானிய ஆட்சிக்குள் ஒரு திறமையான மற்றும் வலுவான தலைவராக இவர் நீண்டகாலமாகப் பார்க்கப்பட்டு வந்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய உச்சத் தலைவருக்கு ஆதரவளிக்குமாறு ஈரானியர்களுக்கு நிபுணர்கள் அவை அழைப்பு
ஈரானின் அடுத்த உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனியை அந்நாட்டின் மதகுருமார்கள் சபையான ‘நிபுணர்கள் அவை’ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“தீர்க்கமான வாக்குப்பதிவின்” அடிப்படையில் கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அரச ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரானியர்கள் அனைவரும் ஒற்றுமையைப் பேணவும், புதிய தலைவருக்குத் தங்கள் ஆதரவை வழங்கவும் அந்த அவை அழைப்பு விடுத்துள்ளது.
குறிப்பாக மதப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த உயரடுக்கினர், அறிஞர்கள் உட்பட அனைத்து ஈரானியர்களும் தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் ஒற்றுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.


