சர்வதேச நீதி கோரி உறவுகளை இராணுவத்திடம் கையளித்த இடத்தில் மாபெரும் போராட்டம்

இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் என கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக காணப்படும் வட்டுவாகல் பாலத்தில் இன்று (8) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 08.03.2026 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பித்த தொடர் கவணயீர்ப்பு போராட்டமானது இன்று ஒன்பது ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் சர்வதேச மகளிர் தினமான இன்று மகளிர் தினம் எமக்கு துக்க தினம் என தெரிவித்து தமக்கு சர்வதேச விசாரணையே தீர்வு என குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்ததுடன், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என இதுவரை இலங்கை அரசாங்கத்தால் எந்த தகவலும் வெளியிடவில்லை எனவும் இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்து, இராணுவத்தினரிடம் ஒப்படைத்த எமது பிள்ளைகள் எங்கே, வட்டுக்கோட்டை தீர்மானம் வழிகாட்டி சுய நிர்ணயம் எங்கள் உரிமை, சர்வதேசமே பதில்சொல் என பல்வேறு கோசங்களை தாங்கிய பதாதைகளுடன் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

எங்கே எங்கே உறவுகள் எங்கே , பழைய சட்டமும் வேண்டாம் புதியசட்டமும் வேண்டாம் , அழிக்காதே அழிக்காதே தமிழரின் இன அழிப்பின் அடையாளமான வட்டுவாகல் பாலத்தை அழிக்காதே, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோசங்களுடன் வட்டுவாகல் பாலத்தடியில் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் செல்வபுரத்தில் இராணுவத்திடம் உறவுகளை கையளித்த இடம் வரை சென்று நிறைவடைந்தது

குறித்த போராட்டத்தில் முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியா,மன்னார் மாவட்டங்களை சேர்ந்த காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், முன்னாள் யாழ் மாநகர மேஜர் மணிவண்ணன் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டதுடனர்

போராட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் வாசிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.