மட்டக்களப்பு மகிழவெட்டுவான் பிரதேசத்தில் அபயம் (ABAYAM) அமைப்பின் நிதிப்பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச மருத்துவ முகாம் இன்று 07.03.2026 நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் விசேட வைத்திய நிபுணர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்துகொண்ட இம்முகாமில் 400க்கும் மேற்பட்ட நோயாளர்கள் தமக்கான மருத்துவ ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக்கொண்டனர்.
குறிப்பாக பொது மருத்துவம், கண் மருத்துவம், சிறுவர் மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் காது மூக்கு தொண்டை போன்ற துறைகளில் விரிவான சிகிச்சைகள் வழங்கப்பட்டதுடன், சுமார் 275 பேருக்கு தொற்றா நோய்களுக்கான (NCD) விசேட பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
மேலும், இதில் கலந்துகொண்டவர்களில் 248 பயனாளிகளுக்கு இலவசமாகக் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள சிறுவர்களுக்குத் தேவையான மேலதிக உணவுகளும் விற்றமின் மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இம்முகாமில் தன்னார்வத்துடன் கலந்துகொண்டு சேவையாற்றிய அனைத்து வைத்தியர்களுக்கும் சுகாதாரத் துறையினருக்கும் அபயம் அமைப்பு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டது.


