வாகரையைப் போதைப்பொருள் அற்ற வலயமாக மாற்ற ஒன்றிணைந்த விழிப்புணர்வு செயற்திட்டம்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தை” முன்னிட்டு, கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மிகப்பரந்தளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“முழு நாடுமே ஒன்றாக” (Country Together) எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக, வாகரை பிரதேச செயலாளர் அவர்களின் நேரடி வழிகாட்டலில் இந்த விழிப்புணர்வுத் தொடர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பெரும் பங்கேற்புடன் விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இதன்போது போதைப்பொருள் பாவனையினால் தனிமனித உடல் நலம், உள நலம் பாதிக்கப்படுவதுடன், அவை எவ்வாறு குடும்ப மற்றும் சமூகச் சிதைவுகளுக்குக் காரணமாகின்றன என்பது குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

மேலும், பொதுமக்களிடையே இச்செய்தியை வீரியமாகக் கொண்டு செல்லும் நோக்கில், மக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுச் சந்திப்புகளில் போதைப்பொருள் ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அத்துடன் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு சுவரொட்டிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

வாகரை பிரதேசத்தைப் போதைப்பொருள் அற்ற, ஆரோக்கியமானதொரு முன்மாதிரி வலயமாக மாற்றுவதற்குப் பொதுமக்களும் சிவில் சமூக அமைப்புகளும் தத்தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என இதன்போது வாகரை பிரதேச செயலகத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.