எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகம் நடாத்திய “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்ட நிகழ்வு நேற்று (05. 03.2026) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற வேளையில், அதனுடைய ஒரு அங்கமாக பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரதேச செயலாளர் திருமதி. ஜெ. திருச்செல்வம் தலைமையில், பிரதேச செயலக போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் க. புவினராஜ் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் போது,
“விற்கின்ற – அடிமையான அனைவருக்குமான அறிவித்தல் – அகன்று செல்” என்ற வாசகத்தை மையமாகக் கொண்டு உளவளத்துணை விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் யூடி ரமேஷ் ஜெயக்குமார் வளவாளராக கலந்து கொண்டு குறித்த திட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பாக தெளிவூட்டல்களை வழங்கினார்.
மார்ச் 01 முதல் “முழு நாடும் ஒன்றாக – தேசிய செயல் திட்டம்” உடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரத்தில், சமூகமட்டத்தில் கடமைபுரியும்
அரச உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் என்பனவும் இதன்போது வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தகள் என பலர் கலந்து கொண்டனர்.


