எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு, மார்ச் 04 – மட்டக்களப்பில் அமைந்துள்ள புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை தனது 150ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 2026ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியை கடந்த புதன்கிழமை (04) மாலை 3.00 மணியளவில் சிறப்பாக நடத்தியது.
பாடசாலை அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, அருட்தந்தை கிளமென்ட் அன்னதாஸ் அவர்களின் ஆசீர்வாதச் செய்தியுடன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழகம் (குழந்தை மருத்துவம்) தலைமை விரிவுரையாளர் டாக்டர் ஏஞ்சலா அருள்பிரகாசம் அந்தோணி அவர்கள் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி (நிர்வாகம்) அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி என். மகேந்திரகுமார் மற்றும் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி உடற்கல்வி விரிவுரையாளர் திருமதி டி. மோகனக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி டி. பவன் மற்றும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் வைத்தியர் நிரோஜா விமலராஜன் ஆகியோர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
போட்டிகளில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஃப்ரீடா இல்லம் 524 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை கைப்பற்றியது. 434 புள்ளிகளுடன் காசில்டா இல்லம் இரண்டாம் இடத்தையும், 420 புள்ளிகளுடன் மாறி இல்லம் மூன்றாம் இடத்தையும், 302 புள்ளிகளுடன் கான்சிலியா இல்லம் நான்காம் இடத்தையும் பெற்றன.
அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி மற்றும் பேண்ட் வாத்தியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன. பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


