வி.ரி.சகாதேவராஜா)
இன்று பேசுபொருளாக இருக்கக் கூடிய கிவுலோயா திட்டத்தின் பிரதான நோக்கம் மகாவலியினூடான நீர்ப்பாசனமே. மாறாக அங்கு எந்த குடியேற்றமும் ஒருபோதும் இடம்பெறாது .
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபு கந்தசாமி தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் எமது செய்தியாளர் சகா நேற்று கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மக்கள் உட்பட நாடுபூராக தேசிய மக்கள் சக்தி மீதும், எமது ஜனாதிபதி மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்து இருக்கின்றார்கள் .அது ஒருபோதும் வீணாகாது. குறிப்பாக வடகிழக்கு மக்களை எமது அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது என்றார் .
அவர், எமது செய்தியாளரின் கேள்விகளுக்கு மேலும் பதிலளிக்கையில்..
எதிர்க்கட்சியினர் கிவுல்ஓயாத் திட்டம் மற்றும் பிரஜா சக்தி போன்றவற்றை தமது அரசியல் எதிர்காலம் கருதி எதிர்த்து வருகிறார்கள். அது மக்களை பாதிக்கலாம்.
எனது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் உள்ள 3000 ஏக்கரில் 1400 ஏக்கர் நிலம் மகாவலிக்கும், மீதி 1600 ஏக்கர் வனவள திணைக்களத்திற்கும் சொந்தமானது.
நான் அந்த பண்ணையாளர்களை கிரான் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர்கள் சகிதம் சென்று சந்தித்தேன். அவர்களது தேவைகள் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடினோம்.
அவர்கள் நலன் கருதி முதற்கட்டமாக மகாவலிக்குச் சொந்தமான 1400 ஏக்கரை விடுவிக்க முயற்சி எடுத்து வருகிறோம்.
நான் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுதும், இனமத பேதமின்றி மட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த ஒரு வருடத்தில் 100 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமான அபிவிருத்தியை செய்திருக்கின்றேன்.
பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டங்களில் மக்கள் பிரச்சனைகளை தேவைகளை அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பதால் தான் அது வேடிக்கையாக கேலியாக மாறி வருகிறது.
உறுப்பினர்கள் சிலர் அதனை தேர்தல் களமாக மாற்ற முயற்சிப்பதால் வேடிக்கையாக இருக்கின்றது. இனி அதற்கு இடமளிக்க முடியாது.அதனை மாற்ற சுற்று நிருபமும் வந்துள்ளது.
கடந்த ஆட்சியாளர்கள் போல் இனவாதத்தை ஆயுதமாக வைத்து நாங்கள் செயல்பட போவதில்லை .எம்மில் இனவாதப் போக்கு இல்லை .நாம் அதற்கு எதிரானவர்கள். ஜனாதிபதி திறமையாக எவ்வித பேதமின்றி செயல்பட்டு வருகின்றார். அவரிடமும் இனவாத போக்கு இடமில்லை. எனவே எமது அரசாங்கம் மக்களது பிரச்சினைகளை இனமதபேதம் கடந்து பொதுவாகவே தீர்த்து வைக்கும். யாரும் அஞ்சத்தேவையில்லை என்றார்.


