மாகாணசபைத் தேர்தல் முறைமையை ஆய்வு செய்து பரிந்துரைகள் முன்வைக்கும் நோக்கில் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு இன்று (20) அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவை அமைப்பதற்கான ஆரம்பக் கூட்டம் கடந்த ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்றிருந்தாலும், உறுப்பினர்களின் பெயர்கள் நியமிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குழு தற்போது தான் முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளது. முதல் கூட்டம் நடைபெற்ற தினத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய நிலையில், இத்தாமதம் கவலைக்குரியது என சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாண சபைத் தேர்தல் முறைமையை ஆய்வு செய்ய தனியே மற்றொரு குழுவை நியமிக்கும் முயற்சி சில தினங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை முறியடித்த பின்னரே இக்குழு நியமிக்கப்பட்டதாகவும் கூறினார். ஜனவரி மாதத்திலேயே குழு முறையாக நியமிக்கப்பட்டிருந்தால், இதுவரை அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இக்குழுவில் தனது பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இக்குழுவில் மொத்தம் 12 உறுப்பினர்கள் இடம்பெற வேண்டிய நிலையில், தற்போது தலைவர் உட்பட 11 உறுப்பினர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, மாகாண சபைகள் தொடர்பான முன்னாள் அமைச்சரான பைசர் முஸ்தாபா அவர்களை பன்னிரெண்டாவது உறுப்பினராக நியமிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாகாணசபைத் தேர்தல் முறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமா என்பது தொடர்பான பரிந்துரைகள் எதிர்வரும் மாதங்களில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.


