“உன் மனமே உனது வலிமை” – மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

நூருல் ஹுதா உமர்

மாணவர்களின் மனநிலை மாற்றம், மன உறுதி மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் ஒழுக்கம் மற்றும் வழிகாட்டல் ஆலோசனைக்கு பொறுப்பான ஆசிரியர் எம்.எஸ்.எஸ்.ஷிப்லி ஷம்சுதீன் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் கே.எல்.ஜௌபர் அவர்களின் ஆலோசனையின் கீழ், பிரதி அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தரம் 09 மற்றும் தரம் 10 மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.எச். லாபீர் மற்றும் திருமதி ஏ.பி. ரொஷான் டிப்ராஸ் ஆகியோர், தற்போதைய சமூக சூழலில் மாணவர்களுக்கான மனநல விழிப்புணர்வின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர்.

அதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர் எஸ்.எச்.எம்.சியாம் மாணவர்களின் மனநிலையை சமநிலையில் வைத்திருக்கும் வழிமுறைகள், எதிர்மறை எண்ணங்களை நேர்மறையாக மாற்றிக் கொள்ளும் உத்திகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும் சாய்ந்தமருது பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வ. குகராஜ் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சட்ட ரீதியான அம்சங்கள் மற்றும் மாணவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இன்றைய வேகமடைந்த சமூகச் சூழலில், மாணவர்களுக்கு பாடப்புத்தக அறிவுடன் மட்டுமல்லாமல், வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ளும் மன உறுதியும், தங்களை பாதுகாத்துக் கொள்ளும் விழிப்புணர்வும் அவசியமானவை என்பதை உணர்த்தும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்நிகழ்வு, அவர்களின் மன உறுதி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் அமைந்தது.