அட்டாளைச்சேனை பாடசாலைகளின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு!

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயம் மற்றும் மீனோடைக்கட்டு டாக்டர் ஜலால்டீன் வித்தியாலயம் என்பவற்றின் நீண்டகாலத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், அரசாங்கத்தின் இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் 16 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை இணைப்பாளர் எஸ்.எம்.றியாஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்திற்கு 9 மில்லியன் ரூபாவும், டாக்டர் ஜலால்டீன் வித்தியாலயத்திற்கு 7 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த நிதி, பாடசாலைகளின் கட்டிடங்களைப் புனரமைப்பதற்கும், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ‘ஸ்மார்ட் வகுப்பறை’ (Smart Class Room) திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் எஸ்.எம்.றியாஸ், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் இணைப்பாளர் சுல்தான் சத்தார், அட்டாளைச்சேனை 8 மற்றும் 9 ஆகிய பிரிவுகளின் பிரஜா சக்தி தலைவர்களான வஹாப் றிசாட், எம்.ஐ.தௌபீக் உள்ளிட்டடோர் அண்மையில் குறித்த பாடசாலைகளுக்கு விஜயம் செய்து, பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் அதிபர்களுடன் கலந்துரையாடினர்.

தேர்தல் காலப்பகுதியில் குறித்த பாடசாலை சமூகத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.