எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை 206A, 206C ஆகிய கிராம சேவை பிரிவுகளில் வசிக்கின்ற பிரதேச மக்களுக்கு அரச சேவைகளை இலகுபடுத்தும் நோக்கில் குறித்த நடமாடும் சேவை நேற்று (28) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை பிறைந்துரைச்சேனை அஸ்கர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் எம். பி. எம். முபாறக் தலைமையில், விழுதுகள் அரச சார்பற்ற நிறுவனமானத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நடமாடும் சேவையில்; அஸ்வெசும, சமுர்த்தி திணைக்கள சேவைகள், பிறப்பு இறப்பு சான்றிதழ், ஆளடையாள அட்டை, சிறுவர், முதியோர் தொடர்பான சேவைகள், வாழ்வாதாரம், பொலிஸ் திணைக்களம், ஆயுர்வேத வைத்தியசாலை, பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை, மீன்பிடித் திணைக்களம், கலாச்சார திணைக்களம் மற்றும் இளைஞர், யுவதிகள் தொடர்பான சேவைகளும் நடைபெற்றன.
இச்சேவைகளைப் பெறுவதற்காக குறித்த கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள அனேகமான பொதுமக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர், கோறளைப்பற்று மத்தியின் உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மற்றும் மாஞ்சோலை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர்கள், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர், பதவி நிலை உத்தியோகத்தர், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை, செயலகம், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நடமாடும் சேவையை முன்னிட்டு மேற்படி கிராம உத்தியோகத்தர் பிரிவில் டெங்கு களப் பரிசோதனைகள் இடம்பெற்றதோடு, வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தினால் புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான கடந்தகால வினாத்தாள்கள் அடங்கிய புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நடமாடும் சேவையில் மேற்படி இரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பலர் கலந்து கொண்டனர்.


