இலங்கையில் இணையவழி நிதி மோசடிகள் கடந்த ஒரு வருடத்தில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் இவ்வாறான மோசடிகளைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தீவிர நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வூட்லர் வழங்கிய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டு 1,528 புகார்கள் பதிவாகின, 442 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு புகார்களின் எண்ணிக்கை 3,100 ஆக இருமடங்காக அதிகரித்துள்ளது. இதில் 314 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு மாத்திரம் இணைய மோசடிகளுடன் தொடர்புடைய 146 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சீனா, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா விசாவில் வந்து கொழும்பு, நீர்கொழும்பு, கம்பஹா ஆகிய பகுதிகளில் முகாமிட்டு இவ்வாறான “மோசடி முகாம்களை” நடத்தியது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மோசடிகளின் சிக்கல் தன்மை மற்றும் மொழிப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, கடந்த 2024 செப்டம்பரில் சீனாவின் சிறப்புக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவியை இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நாடியுள்ளது.
மோசடிக்காரர்கள் பெரும்பாலும் வங்கிக் கணக்கு விபரங்கள், கடவுச்சொற்கள், OTP எண்கள் மற்றும் கியூ.ஆர். குறியீடுகளைத் தந்திரமாகப் பெறுதல், ஒன்லைன் வேலைவாய்ப்பு, முதலீட்டுத் திட்டங்கள், இலகு கடன் திட்டங்கள் போன்ற போலி வாக்குறுதிகளை வழங்குதல், பிரபலமானவர்களின் பெயரில் போலிச் சமூக வலைதளக் கணக்குகளை உருவாக்குதல், காதல் மற்றும் உறவுமுறை மோசடிகள் என்பவற்றின் மூலம் இடம்பெறுகின்றன.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள இணையக் குற்றங்கள் தடுப்புப் பிரிவின் மூலம் இவ்வாறான மோசடிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
தெரியாத நபர்களுடன் வங்கி விபரங்களையோ அல்லது தனிப்பட்ட ஆவணங்களையோ பகிர வேண்டாம். சந்தேகத்திற்கிடமான லிங்குகளை கிளிக் செய்யவோ, உறுதிப்படுத்தப்படாத செயலிகளை தரவிறக்கம் செய்யவோ வேண்டாம். சமூக வலைத்தளங்களில் ‘அங்கீகரிக்கப்பட்ட சின்னம்’ உள்ள அதிகாரப்பூர்வ பக்கங்களை மாத்திரம் நம்புங்கள்.
ஏதேனும் மோசடி நடந்தால் உடனடியாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இணையக் குற்றப் பிரிவிற்குப் புகாரளியுங்கள்.
இதேவேளை, கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் சமூக வலைத்தள தவறான பயன்பாடு மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான 12,650 புகார்கள் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவிற்குக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


