இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் பேரணிக்கு அழைப்பு!

இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தாயக செலணி அமைப்பினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள்.

04.02.1948 அன்று பிரித்தானிய காலணித்துவ ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரம் அனைத்தையும் சிங்கள பேரினவாதத்திடம் ஒப்படைத்த நாள்.

அந்நாளில் இருந்து தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்களாகிய நாம் திட்டமிட்டு அடக்கப்பட்டு இனப்படுகொலைக்கு ஆளாகி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எனவே வருகின்ற 04.02.2026 அன்றைய நாளை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தலைமை ஏற்று இணைந்து நடாத்தும் பேரணியில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகின்றோம்.

1.வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீகத் தாயகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

2. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.

3. தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் தமிழ் மக்களின் தேசிய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.

4.தமிழ் இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நிரந்தர பொறுப்புக் கூறலை உறுதி செய்ய வேண்டும்.

5.இலங்கை அரசு கையகப்படுத்தியுள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை விடுவிப்பதோடு, தமிழர் தாயகத்தை பல்வேறு வகையில் புத்த விகாரைகளை நிறுவியும் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தி கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

6. “பயங்கரவாதத் தடைச்சட்டம்” என்ற பெயரில் இன்றும் தொடரும் தமிழின அடக்கு முறைகளை நிறுத்தி, நீண்ட காலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

7. கடந்த 77 ஆண்டுகளாகத் தொடரும் தமிழர் இனவழிப்பை நிறுத்தி ஓர் சர்வதேச நீதிப் பொறிமுறை மூலம் தமிழர்களின் வாழ்வுரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.

8. வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதையும் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பதையும் ஏற்றுக் கொண்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் திம்பு பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் இறையாண்மை உள்ள தேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

மேற்கண்ட விடயங்களை வலியுறுத்தி “கரிநாள்” போராட்டம் 04 புதன்கிழமை காலை 10 மணிக்கு தமிழர் தாயகத்தின் கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்டங்களில் நடைபெறும்.

இந்தப் போராட்டம் வெற்றியடைய, அனைத்து ஊடகங்களும், அமைப்புக்களும், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், மாணவர் அமைப்புக்கள், வடக்குக் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், பட்டதாரிகள் சங்கம், சிவில் அமைப்புக்கள், மத அமைப்புக்கள், வர்த்தகர் சங்கங்கள், கடல் தொழிலாளர் சங்கங்கள், விவசாயக் கழகங்கள், போக்குவரத்துக் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், ஊர்ச் சங்கங்கள், புத்திஜீவிகள் மற்றும் பொது மக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரது பேராதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டுகின்றோம் – என்றனர்.