(வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்திற்கான வரவேற்பு வளைவு தொடர்பான வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (9) வெள்ளிக்கிழமை இவ் வழக்கு மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேற்படி தவணை, மன்றினால் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சட்டத்தரணி அருள் நிதான்சன் தெரிவிக்கையில்..
சம்மாந்துறை பிரதேச சபையின் அனுமதி இன்றி வளைவு கட்டடம் அமைக்க ஆரம்பித்தமை தொடர்பாக கடந்த வருடம்(15/09) அன்று வழக்கு தொடுத்திருந்தமை தெரிந்ததே.
ஆரம்பத்தில் இவ்வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ம.ஆ.சுமந்திரன், மற்றும் மு.கா. செயலாளர் நிஸாம்காரியப்பர் உட்பட பல சட்டத்தரணிகளும் ஆஜராகியிருந்தனர்.
அவ்வேளையில் இரண்டு சமூகத்தினரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து ஆலோசித்து தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும் என (09/01/2026) வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதன்படி அவ்வழக்கானது நேற்றையதினம்( 09) சம்மாந்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இவ்வழக்கிற்கு சம்மாந்துறை பிரதேச சபை சார்பாக சட்டத்தரணிகளான பௌஸான், சாமிளா ஆகியோரும், கோவில் நிர்வாகத்தினர் சார்பாக தமிழரசு கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான இளைஞர் அணி தலைவரும் சட்டத்தரணியுமான அருள். நிதான்சன் ஆகிய நானும் ஆஜராகியிருந்தோம்.
அதன் அடிப்படையில் விவாதங்களை ஆராய்ந்த நீதிபதி இரு தரப்பினரும் இணைந்து சாதகமான பல முடிகளை எடுத்திருந்த போதிலும் சரியான தெளிவின்மையான செயற்பாடுகள் காணப்படுவதால் மீண்டுமொருமுறை இருதரப்புடன் எதிர்வரும் மாசி மாதம் 05 ஆம் திகதிக்கு முன்பாக பேசி தீர்க்கமான முடிவினை பெற போவதாக குறிப்பிட்டார்.
பொதுநலமான இந்த விவகாரத்தினை இரு தரப்பினரும் பாராபட்சம் காட்டாமல் இணைந்து தீர்க்கமான முடிவினை அடுத்த தவணை வழக்கின் போது தெரிவிப்பார்கள் என நீதிமன்றம் உத்தேசித்துள்ளது.
எதிர்வரும் மாசி மாதம்5 ஆம் தினத்திற்கு முன்பதாக
ஆலய நிர்வாகம் மற்றும் விண்ணப்தாரிகள்
இரு திறத்தவரும் கதைத்து
இருந்தது இருந்தபடி இருக்க வேண்டும்.
இருதிறத்தரும்பேசி மன்றுக்கு நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்ற அடிப்படையில் நீதிமன்றம் இந்த கட்டளையை பிறப்பித்துள்ளது.


