ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, அடுத்த சில மணித்தியாலங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Deep Depression) வலுப்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது நாளை மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரையான காலப்பகுதியில், ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனைக்கு இடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் நாட்டின் பல பாகங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், தென்கிழக்கு கடற்பரப்புகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஏற்கனவே கடலுக்குச் சென்றுள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குத் திரும்புமாறு கோரப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படலாம் என்பதால் கரையோரப் பகுதிகளில் வசிப்போர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கோரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவசர உதவி அல்லது அனர்த்தங்கள் குறித்த தகவல்களை வழங்க, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற அவசர இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறும், மேலதிக பாதுகாப்பு உதவிகளுக்கு பிரதேச காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ள முடியும் எனவும் கோரப்பட்டுள்ளது.