அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில், பாடசாலை ஒன்றுக்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று இன்று (6) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் குறித்த காணியில் உழவு செயற்பாடு மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெய்த மழை காரணமாக மண்ணுக்குள் புதைந்திருந்த கைக்குண்டு மேலே வெளிப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இக்காணி வழியாக தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கைக்குண்டை கண்டறிந்து, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த சவளக்கடை பொலிஸார், கைக்குண்டை பார்வையிட்டதுடன்,
குண்டு செயலிழக்கும் விசேட அதிரடி படையினர் மற்றும் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட கைக்குண்டு பாகிஸ்தான் நாட்டு தயாரிப்பானது எனவும், கடந்த காலங்களில் இப்பகுதியில் நடமாடிய விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த கைக்குண்டை அவ்விடத்தில் இருந்து அகற்றி செயலிழக்கச் செய்வதற்காக இன்று நீதவான் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதனையடுத்து,
சவளக்கடை பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
ஐ.எல்.ஏ. கபூர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


