இலங்கையின் புனரமைப்பிற்கு இந்தியா பல மில்லியன் நிதி உதவி …!

இலங்கையின் புனரமைப்புப் பணிகளுக்காக இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான விசேட நிதியுதவிப் பொதியை வழங்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று அறிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்று காலை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்த அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

டிட்வா சூறாவளியினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய சேதங்கள் குறித்து ஜனாதிபதியுடன் விரிவாகக் கலந்துரையாடியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தியா உறுதியளித்துள்ள இந்த 450 மில்லியன் டொலர் நிதி உதவியை எவ்வளவு விரைவாகவும் வினைத்திறனாகவும் இலங்கைக்கு வழங்க முடியும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிதியுதவி இரண்டு முக்கிய பிரிவுகளாக வழங்கப்படவுள்ளது.

சலுகைக் கடனாக 350 மில்லியன் அமெரிக்க டொலரும் நன்கொடையாக 100 மில்லியன் அமெரிக்க டொலரும் வழங்கப்படவுள்ளது.

இந்த புனரமைப்புப் பொதியானது சூறாவளியினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட சேதமடைந்த வீதிகள், தொடருந்து பாதைகள் மற்றும் பாலங்களை மீளமைத்தல் மற்றும் பழைய நிலைக்குக் கொண்டு வருதல்.

முழுமையாக அழிக்கப்பட்ட மற்றும் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புதல்.

சுகாதாரம் மற்றும் கல்வித்துறை சார்ந்த கட்டடங்கள் மற்றும் வசதிகளைப் புனரமைத்தல். பாதிக்கப்பட்ட விவசாயத் துறையை மீண்டும் கட்டியெழுப்புதல். எதிர்கால அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வகையில் சிறந்த பேரிடர் மேலாண்மை மற்றும் தயார்நிலைத் திட்டங்களை உருவாக்குதல் போன்றவற்றை உள்ளடக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடு என்ற ரீதியில் இலங்கையின் இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்பதை இச்சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.