நிரம்பி வழியும் நீர்த் தேக்கங்கள்!

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 73 பிரதான குளங்களில் 36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, நடுத்தர அளவிலான சுமார் 52 குளங்களும் வான் பாய்ந்து வருவதாக அத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.

இந்த வான் பாய்தல் காரணமாக வெள்ள நிலைமையோ அல்லது அத்தகைய நிலைக்கு நீர் வெளியேற்றப்படுவதோ இடம்பெறாது என்றும், இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறெனினும், எதிர்கால பருவமழை நிலைமைகளுக்கு ஏற்ப ஆறுகளின் நீர் மட்டங்கள் மாற்றமடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், இதன் காரணமாக அந்த நிலைமைகள் குறித்து அவதானம் செலுத்திச் செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி நில்வலா நதியை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த நதிப் படுக்கையை அண்டிய பகுதிகளில் ஆங்காங்கே 50-100 மில்லி மீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்த நிலைமையின் அடிப்படையில் நில்வலா நதியின் நீர் மட்டம் சிறிய அதிகரிப்பைக் காட்டினாலும், பதிவான மழை வீழ்ச்சியின் அடிப்படையில் அது வெள்ள நிலைமை ஏற்படும் அபாயம் வரை செல்லவில்லை என்றும் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார குறிப்பிட்டார்.