கிரான் பிரதேசத்தில் அனைத்து திணைக்களம் சார் நடமாடும் சேவை!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா அவர்களின் எண்ணக்கருவில் உதித்த “கிளீன் ஸ்ரீ லங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் “மகிழ்ச்சியான நாடு கிராமம் தோறும்” எனும் நிகழ்ச்சித் திட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், கோறளைப்பற்று தெற்கு – கிரான் பிரதேச செயலகத்துடன் இணைந்து அனைத்து திணைக்களம் சார் நடமாடும் சேவை இன்று (16) இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் பங்குபற்றுதலுடன் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் கிரான்கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் திருமதி.பி.நிருபா அவர்களின் ஏற்பாட்டில் கிரான் ரெஜி மண்டபத்தில் நடமாடும் சேவை இடம் பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேவையாற்றும் மக்களின் நாயகனாக ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார் என தெரிவித்தார்.

மாவட்டத்தின் கஷ்ட பிரதேசங்களில் ஒன்றான கோறளைப்பற்று தெற்கு – கிரான் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு அரச திணைக்களங்களின் சேவைகளை அவர்களின் பிரதேத்திற்கு சென்று வழங்கினர்.

இதன் போது காலம் கடந்த பிறப்பு பதிவுகள், காணி தொடர்பான சேவைகள், கமநல சேவைகள், அஸ்வெசும, முதியோர் அடையாள அட்டை வழக்குதல், வெளிநாட்டு தொழிலுக்காக புலம் பெயர்ந்தவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான சேவைகள் போன்ற பல சேவைகள் இதன் போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி.கே.லக்சிகா மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் திருமதி.ஜே.நிமாஜினி ஆகியோரினால் வடிவமைக்கப்பட்டு கணனி முறைமையினூடாக தரவுகள் இலத்திரனியல் முறையில் பதிவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் மாகாண காணி ஆணையாளர் கே.எல்.எம். முஸம்மில், கிழக்கு வலய பிரதி பதிவாளர் நாயகம் கே. நடராஜா, உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் மாவட்ட இணைப்பாளர் பேபியன் பாத்திலட், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி.திலிப் குமார், பிரதேச சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்பு செயலாளர் அப்துல்லா மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.