வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்முனை RDHS மனிதாபிமான உதவி.

(றியாஸ் ஆதம்)

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தினால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்ததுடன், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இயல்பு வாழ்க்கையும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கருதி, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையிலான பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அனர்த்த மனிதாபிமான குழுவினர் கடந்த சனிக்கிழமை (13) மூதூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்து, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்வையிட்டதுடன், அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை கருத்தில் கொண்டு நிவாரணப் பொதிகளையும் வழங்கி வைத்தனர்.

மேலும், வெள்ள அனர்த்தத்திற்குப் பின்னர் ஏற்படக்கூடிய தொற்று நோய்கள், குடிநீர் பிரச்சினை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரச்சினைகள் போன்றவற்றைத் தடுக்கும் நோக்கிலும் அதிகாரிகள் மக்களுடன் கலந்துரையாடி தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.

இந்த மனிதாபிமானப் பணியில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஏ.பி. மசூத், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பிரிவின் பொறுப்பு வைத்தியர் டொக்டர் எம்.சி.எம்.மாஹிர், தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்தியர் டொக்டர் எம்.ஐ.எம்.எஸ்.இர்ஷாட், சுகாதார தகவல் முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்தியர் டொக்டர் ஐ.எம்.முஜீப், சுற்றுச்சூழல் தொழில்சார் உணவுப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்தியர் டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத், ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எல்.அப்துல் ஹை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, அதன் கீழ் இயங்கும் சுகாதார நிறுவனங்கள் மற்றும் கல்முனை பிராந்திய தனியார் பாமசி உரிமையாளர் சங்கம் ஆகியவற்றின் பங்களிப்புடன் இந்த மனிதாபிமான நிவாரணப் பணி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.