பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புகையிரத சேவையை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!!

அபு அலா

கொழும்பிலிருந்து பதுளைக்கும் அதேபோன்று மட்டக்களப்புக்கும், திருகோணமலைக்கும் அமையப்பெற்றுள்ள புகையிரதப் போக்குவரத்து சேவையில், ஒரு அங்குலம் கூட இற்றைவரை விஸ்தரிக்கப்படவில்லை என்று இலங்கை ஜனநாயக முன்னணியின் தலைவர் ஏ.பி.கமால்தீன் தெரிவித்தார்.

இலங்கை ஜனநாயக முன்னணியின் ஊடக மாநாடு இன்று (15) அட்டாளைச்சேனை பிரதான காரியாலயத்தில் இடம்பெற்றதோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பிரித்தானியரின் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட புகையிரதப் போக்குவரத்து சேவையை விஸ்தரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் கடந்த 1978 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளித் தாக்கத்தின் பின்னரோ அல்லது 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி தாக்கத்தின் பின்னரோ இந்த புகையிரத விஸ்தரிப்புச் சேவையை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கலாம். ஆனால், கடந்த அரசாங்கங்கள் அந்த சந்தர்ப்பங்களை நழுவ விட்டனர்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட இரண்டு அனர்த்தங்களைவிட படுமோசமான அனர்த்தம் கடந்த வாரம் டித்வா புயலினால் ஏற்பட்டது. இப்பாதிப்புக்களை அவதானித்த வெளிநாட்டு அரசாங்கங்களும், நிதி நிறுவனங்களும் அனுதாபக் கண்ணோடு பல உதவிகளை இன்றும் செய்து வருகின்றன.

குறிப்பாக எமது நாட்டில் தற்போது ஏற்பட்ட அனர்த்தினால் புகையிரதப் பாதைகள் சீரழிந்துள்ளது. இவற்றினைச் சீர்செய்வதற்காக வெளிநாட்டு உதவியை நாடுகின்றபோது, பிரித்தானியர் ஆட்சியில் அமையப்பெற்ற புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்ட நிலையங்களிலிருந்து அதாவது, கொழும்பிலிருந்து – பதுளை வரையிலும், மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத சேவை மொனராகலை வரையிலும், கொழும்பிலிருந்து – மட்டக்களப்பு வரையிலும் மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத சேவை பொத்துவில் வரையிலும், கொழும்பிலிருந்து – திருகோணமலை வரையிலும் மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத சேவையை புல்மோட்டை வரையிலும் விஸ்தரிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளினை இலங்கை ஜனநாயக முன்னணி எமது ஜனாதிபதியையும் தேசிய மக்கள் அரசையும் வினயமாக வேண்டிக் கொள்கின்றது.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற முதுமொழிக்கேற்ப குறித்த புகையிரதப் பாதைகளை விஸ்தரிப்பதற்கான முன்னெடுப்புக்களை இச்சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத சேவை விஸ்தரிக்கப்பட்டால் இந்த நாட்டு மக்களுடைய ஒட்டு மொத்தமான ஆதரவு எதிர்காலத்தில் இவ்வரசாங்கத்திற்கு கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என ஜனநாயக முன்னணியின் தலைவர் ஏ.பி. கமால்தீன் மேலும் தெரிவித்தார்.