வானிலை அதிகாரிகள் அறிவிப்பு செய்த போது தூங்கிக் கொண்டிருந்த அரசாங்கம் இப்போது குற்றம் சாட்டுகின்றது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நாட்டில் ஏற்பட்ட சூறாவளி புயல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று சிலர் இப்போது குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இந்த முன்னறிவுப்பை உரிய தரப்பினர் நவம்பர் 11 முதல் வெளியிட்டு வந்தனர். வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் ஊடகங்கள் முன்வந்து, வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தென்கிழக்கு கடல் பகுதிகளில் கடல் சீற்றமும், பலத்த காற்றும் வீசுவதோடு, இலங்கையின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று தெரிவித்தனர். இது பின்னர் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறக்கூடும் என்று முழு நாட்டிற்கும் தெரிவித்து வந்தனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு முன்வந்து இது குறித்து தெரியப்படுத்திய காலப்பிரிவில் நாட்டில் மழை காணப்படவில்லை. வளிமண்டலவியல் திணைக்களம், இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதானிகள் மற்றும் கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதானிகள் ஊடக சந்திப்புகளை நடத்தி, இந்த புயல் அவதானம் தொடர்பில் மக்களை தெளிவூட்டி வந்தனர். நவம்பர் 11, நவம்பர் 12, நவம்பர் 14 மற்றும் நவம்பர் 17 ஆகிய திகதிகளில் குறித்த அதிகாரிகள் இது தொடர்பாக வெளிக்கொணர்ந்து முன்னறிப்புச் செய்து கொண்டே வந்தனர். வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் கூட நவம்பர் 21 மற்றும் நவம்பர் 22 ஆகிய திகதிகளில் இந்த விடயம் குறித்து நாட்டிற்கு அறிவித்தார். நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மீண்டும் ஒருமுறை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் பணியைச் செய்து வந்தன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நவம்பர் 11 முதல் நவம்பர் 15 வரை இந்த மோசமான வானிலை நிலைமை தொடர்பிலான விடயங்கள் வெளிவந்தபோதும் கூட, இடர் முகாமைத்தைவ நிலையத்தின் நடவடிக்கைகளின் செயலற்ற தன்மைக்கான காரணங்கள் யாது என கேள்வி எழுப்புகிறோம். தற்சமயம் வளிமண்டலவியல் திணைக்களத்தினரை நோக்கி விரல் நீட்டாமல் இடர் முகாமைத்துவ செயல்பாட்டில் காணப்படும் பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும். இந்த சூறாவளி புயலால் இந்த நாட்டு மக்கள் தங்கள் உயிர்களையும் சொத்துக்களையும் இழந்து, அனாதைகளாக விடப்பட்டுள்ளனர். நாட்டடில் பல துறைகள் சீர்குலைந்து, மில்லியன் கணக்கான மக்கள் வீடிழந்து தவிக்கும் நேரத்தில், இந்த மோசமான வானிலை குறித்த விடயங்களைச் சரியாக முன்வைத்த அதிகாரிகள் மீது அச்சுறுத்தல்களை விடுக்காது, இந்தப் பேரழிவிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தவறுகளைத் திருத்திக் கொள்வதே மிக உயர்ந்த கடமையாக அமையும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை அரசியலாக்க வேண்டும் என்றும், வெளித்தெரியும் விதமாக இந்த செயல்முறையை முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகவும், விரைவான சேவைகளையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே, அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறு எதிர்க்கட்சி கோரியது. ஆனால் அரசாங்கம் ஊடகங்களை அடக்குவதற்கு முயற்சி செய்து வருகின்றது. இவ்வாறு ஊடகங்களை அடக்குமுறைக்குட்படுத்த நாம் இந்த அவசரகால நிலையை கோரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.