கதிரவெளியில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டோம். வாகரை பிரதேச செயலாளர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தேன். குறித்த பிரதேசத்தில் இருக்கும் மக்களை சரியான நேரத்திற்கு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சேர்த்து உணவினை இவ் அதிகாரிகள் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொதியினை அக் குடும்பங்கள் வீடு திரும்புகையில் தமிழரசுக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் தலைமையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் அவர்களும் கலந்து கொண்டார்.
அத்துடன் மாவிலாறு அணைக்கட்டு உடைந்து திருகோணமலையில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பாதிக்கப்பட்ட வெருகல் பிரதேச மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினோம். மேலும் பிரதேச வெருகல் பிரதேச சபை தவிசாளர் கருணாநிதியுடன் முகாம்களில் தங்கியுள்ள மக்களையும் பார்வையிட்டதோடு; பிரதேச செயலாளருடனும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களால் வழங்கப்பட்டத்தில் நாமும் கலந்து கொண்டோம்.
திருகோணமலை மூதூர் பட்டித்திடல் மகா வித்தியாலய முகாமிற்கு சென்ற வேளையில் இராணுவமோ வேறு எந்த அதிகாரிகளும் தம்மை சந்திக்கவில்லை எனவும், கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் அகியோர் மாத்திரமே தம்முடன் களத்தில் நின்றதாகவும் மக்களால் சில குறைபாடுகள் எம்மிடம் முன்வைக்கப்பட்டன. தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள், மூதூர் பிரதேச சபை தவிசாளர் உப்புவெளி பிரதேச சபை தவிசாளர், வெருகல் பிரதேச சபை தவிசாளர், தம்பலகாமம் உப தவிசாளர் போன்ற தமிழரசுக்கட்சியினை சேர்ந்தவர்களே படகில் வந்து உணவுகளை வழங்கியதாகவும் மக்கள் தெரிவித்தனர். இது வரையிலும் அரசாங்கத்தினால் தமக்கான குடிநீர் கூட வழங்கவில்லை என விசனம் தெரிவித்தனர். அவர்களுக்கான வசதிகள் செய்வதற்குரிய ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
தோப்பூர் பள்ளி குடியிருப்பு பிரதேசத்திற்கு பள்ளிக் குடியிருப்பு வட்டார உறுப்பினருடனும், மூதூர் தவிசாளருடனும் சென்றிருந்தோம். அங்கு மக்களை நாம் நேரில் சந்தித்து உரையாடினோம். அவர்களது தேவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களால் அவர்கள் சேகரித்த நிவாரண பொருட்கள் அங்கு வழங்கப்பட்டுள்ளது.


