உலக உணவுத்திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத்திட்டத்தின் அனுசரனையின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகள் தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடலானது மாவட்ட அசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புகான கூட்டாண்மை செயலகத்திற்கான பணிப்பாளர் நாயகம் ஆர். ரூசாந்தன் பங்கு பற்றுதலுடன் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (27) இடம் பெற்றது.

இதன் போது மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத் தோட்டத்தின் முறைமையினுடாக பாடசாலை போசாக்கு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு மற்றும் எதிர்வரும் வருடங்களில் மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்
490 பயனாளிகளினால் வீட்டுத் தோட்டத்தின் முறைமையினுடாக பாடசாலை போசாக்கு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந் நிகழ்வில் பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஷ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான வி. நவநிதன், ரீ நிர்மலராஜ், உலக உணவுத்திட்ட மாவட்ட இணைப்பாளர் எஸ்.சிவசங்கர், உலக உணவுத்திட்ட விடைய உத்தியோகத்தர் எம். வாகீசன் கலந்து கொண்டனர்.

இத் திட்டத்தினூடாக மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களில் உள்ள 331 பாடசாலைகளைச் சேர்ந்த 48819 மாணவர்கள் நஞ்சற்ற போசாக்கான உணவினை பெற்றுக் கொள்கின்றமை குறிப்பிட்டத்தக்கதாகும்.