ஹஸ்பர் ஏ.எச்_
“சமூக சக்தி” வறுமை ஒழிப்பு தேசிய திட்டத்தை செயல்படுத்தும் முகமாக, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான பயிற்சித்திட்டம் இன்று (25) திருகோணமலை, உப்புவெளி பகுதியில் அமைந்துள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
ஒவ்வொரு கிராமத்திலும் சமூக அபிவிருத்தி சபைகளை நிறுவுவதன் மூலம் இந்த திட்டம் அடிமட்டத்திலிருந்து செயல்படுத்தப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ‘சமூக சக்தி’ தேசிய திட்டத்தை செயல்படுத்தும்போது அரச அதிகாரிகள் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள், சமூக அபிவிருத்தி மன்றங்களை நிறுவுதல் மற்றும் சமூக வலுவூட்டலுக்காக அரச அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இதன்போது ஜனாதிபதி செயலகத்தின் வளவாளர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.
சமூக சக்தி செயலகம் மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுடன் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மாகாண ரீதியாக 09 நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது சமூக சக்தி செயலகத்தின் பணிப்பாளர், அம்பாறை மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர், திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட மட்ட திட்டமிடல் பணிப்பாளர்கள்,பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்களைக் கொண்ட இவ்விழிப்புணர்வு பயிற்சித்திட்டமானது நாளையும் (26) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


