ஆர்.ஜே. மீடியாவின் “குரல் மகுடம்” அறிவிப்பாளர் போட்டி மற்றும் விருது விழா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஆர்.ஜே. மீடியா ஊடக வலையமைப்பின் தேசிய ரீதியிலான “குரல் மகுடம்” அறிவிப்பாளர் போட்டி மற்றும் விருது வழங்கல் விழா, கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில், ஆர் ஜே மீடியா வலையமைப்பின் பணிப்பாளரும் வானொலி அறிவிப்பாளருமாகிய ஏ.எம்.இன்ஷாப் தலைமையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவின் பிரதம அதிதியாக,
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீட பீடாதிபதி, பேராசிரியர் கலாநிதி எம்.எம்.பாஸில் கலந்து சிறப்பித்ததோடு, கௌரவ அதிதிகளாக, சம்மாந்துறை பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஸ்மி மூஸா, மனித நேய நற்பணிப் பேரவையின் தலைவர் மனித நேயன் இர்ஷாத் ஏ.காதர், சிலோன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமாகிய அஸ்மியாஸ் ஷஹீத், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வை.எம்.நிம்ஸாத், சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.சமீஹா சபீர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் பிரிவின் தயாரிப்பாளர் இஸ்பஹான் ஷர்ஃப்தீன் ஆகியோர் கலந்து கொண்டதுடன்,
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் செய்தி வாசிப்பாளர் மற்றும் அறிவிப்பாளர் ஏ.பி.எம்.நிஸ்ரின், நியூஸ் ப்ளஸ். எல்.கே. தலைமை ஆசிரியரும் இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் பொருளாளருமான கியாஸ்.ஏ.புகாரி, வசந்தம் தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்தி வாசிப்பாளரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமாகிய எம். கவிதா பாரதி, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் என். தீபதர்ஷினி, சக்தி தொலைக்காட்சி மற்றும் சக்தி வானொலியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் முஹம்மட் ஷவ்கி, வசந்தம் தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்தி வாசிப்பாளரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமாகிய எம்.ஜே.எம்.ஷுக்ரி உள்ளிட்டவர்கள் நிகழ்வை சிறப்பித்ததுடன், குரல் மகுடம் அறிவிப்பாளர் இறுதிச்சுற்றுப் போட்டியின் நடுவர் குழுவிலும் பங்கேற்றனர்.

இவ்விழாவானது, இரண்டு கட்டங்களாக இடம்பெற்றதுடன், இதில் பல துறைகளில் சிறந்து விளங்கிய பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், குரல் மகுடம் அறிவிப்பாளர் போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டியாளர்கள், ரமழான் சுவனச்சோலைப் போட்டி வெற்றியாளர்கள் மற்றும் மருதாணிப் போட்டி வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், கடந்த கால ஊடகப் பயிற்சி நெறியில் முதல் தர நிலையைப் பெற்ற மாணவர்களுக்கான முதல்தர சிறப்புப் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. மேலும், நடுவர் குழுவினருக்கும், அதிதிகளுக்கும் நினைவுப் பாராட்டுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், விரிவுரையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், மற்றும் போட்டியாளர்கள் எனப் பல்வேறுபட்டவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.