திருகோணமலை மாவட்டத்தின் பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் வேலைகளை பார்வையிடல்

ஹஸ்பர் ஏ.எச்_

ஜனாதிபதி அவர்களின் வேலை திட்டத்திற்கு அமைவாக திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவின் நடுவூத்து கிராம சேவையாளர் பிரிவில் பகல் நேர பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டம் திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது

இதற்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத் திட்டத்தினை மேற்பார்வை செய்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தர்சணி கருணாரட்ண ,மேலதிக பணிப்பாளர் மற்றும் நாவின்ன பகல் நேர பராமரிப்பு நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் வருகை தந்திருந்தனர். குறித்த கள விஜயம் (16) மாலை இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் பொறுப்பு அதிகாரிகள் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ,மேலதிக பணிப்பாளர் அவர்களினால் கட்டுமானங்கள் தொடர்பாகவும் விசேட தேவையுடைய குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் சுகாதார வசதிகள் மற்றும் அவர்களுடைய வசதிகள் தொடர்பாக எவ்வாறான அளவுத் திட்டங்களில் கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட பொறியியலாளர் உடன் விரிவாக கலந்துரையாடினர் .

மற்றும் விசேட தேவையுடைய குழந்தைகள் , சிறுவர்களின் சுகாதார வசதிகள் சரியான முறையில் பேணப்பட வேண்டும் எனவும் மற்றும் அவர்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்ற வகையில் கட்டிடங்கள் சரியான முறையில் அமைக்கப்பட வேண்டும் எனவும் சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் கட்டிடங்களில் உள்ள குறைபாடுகள் மாற்றிஅமைக்கப்பட வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர் கூறினார்

இறுதியாக மாவட்ட செயலாளர் இது மாற்றுத்திறனாளிகளுக்கு என விசேடமாக அமைக்கப்படுகின்ற கட்டடம் என்பதினால் மிகவும் தரமான முறையில் இதற்குரிய சில வேலைகள் யாவும் உரிய திகதிகளில் அளவு திட்டங்களுக்கு ஏற்ப உரியவாறு நடைபெறுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார்.
இதில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி, தேசிய மக்கள் சக்தியின் கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ,சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட இணைப்பாளர், துறை சார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.